நெடுங்காடு தொகுதியில் மினி ஸ்டேடியம் அமைக்க வேண்டும்: மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் டாக்டர் விக்னேஸ்வரன் எம்.எல்.ஏ. மனு!

புதுடெல்லி:
காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு–கோட்டுச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வி. விக்னேஸ்வரன் எம்.பி.பி.எஸ்., இன்று புதுடெல்லியில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியாவை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது நெடுங்காடு தொகுதியில் இளைஞர்களின் நலனுக்காக நவீன வசதிகளுடன் கூடிய ‘மினி ஸ்டேடியம்’ அமைத்துத் தரக் கோரி விரிவான கோரிக்கை மனுவினை அளித்தார்.
அந்த மனுவில், காரைக்கால் பிராந்தியத்தின் நெடுங்காடு மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிப்பதற்கும், அவர்களது உடற்தகுதியை மேம்படுத்துவதற்கும் விளையாட்டு மைதானம் அவசியமாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இளைஞர்கள் ராணுவம், துணை ராணுவம், காவல்துறை மற்றும் அரசுப் பணிகளுக்கான உடற்தகுதித் தேர்வுகளில் (Physical Eligibility Tests) பங்கேற்று வெற்றிபெறும் வகையில், முறையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள இந்த மினி ஸ்டேடியம் பேருதவியாக இருக்கும் என்று சுட்டிக்காட்டப்பட்டது.
கிராமப்புறப் பகுதிகளில் வசிக்கும் மாணவ-மாணவிகள் மற்றும் இளைஞர்களிடையே தடகளம், கால்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் இயல்பான திறமைகள் கொட்டிக்கிடக்கின்றன. ஆனால் முறையான பயிற்சி மைதானம் இல்லாத காரணத்தால் அவர்களின் ஆற்றல் முழுமையாக வெளிப்படாமல் போகிறது. எனவே, நெடுங்காடு பகுதியில் அனைத்து நவீன வசதிகளையும் உள்ளடக்கிய மினி விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டால், கிராமப்புறத் திறமையாளர்கள் மாநில மற்றும் தேசிய அளவில் மிளிர வாய்ப்பாக அமையும் என விக்னேஸ்வரன் எடுத்துரைத்தார்.
தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வீரர்களுக்கு அரசு பல்வேறு ஊக்கத்தொகைகளை வழங்கி கௌரவித்து வரும் சூழலில், அதற்குத் தேவையான ஆரம்பக்கட்ட விளையாட்டு உட்கட்டமைப்புகளை அடிமட்ட கிராமப்புறப் பகுதிகளில் உருவாக்குவது இன்றியமையாதது என விளையாட்டு ஆர்வலர்களும் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருகின்றனர்.
நெடுங்காடு தொகுதியின் இந்த நியாயமான கோரிக்கையைக் கனிவுடன் கேட்டறிந்த மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ் இப்பிரச்சினையை ஆய்வு செய்து உரிய ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சாதகமாக உறுதி அளித்தார்.


