புதுச்சேரி

தட்டாஞ்சாவடியில் மழைநீர் தேங்குவதைத் தடுக்க வாய்க்கால்களை இருசக்கர வாகனத்தில் சென்று ஆய்வு செய்த MLA அசோக் ஆனந்த்!

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பருவமழை காலங்களில் மழைநீர் தடையின்றி வெளியேறும் வகையில், வாய்க்கால்களைச் சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்த் நேரில் சென்று விரிவான கள ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்கள் மழைக்காலங்களில் சந்திக்கும் இன்னல்களுக்குத் தீர்வு காணும் வகையில் இருசக்கர வாகனத்தில் தொகுதி முழுவதும் சென்று அவர் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.

தட்டாஞ்சாவடி தொகுதிக்கு உட்பட்ட ராஜாஜி நகர், தொட்டுப்பாளையம், புதுப்பேட்டை, அகத்தியர் வீதி, முத்துலிங்கபேட்டை மற்றும் ஏர்போர்ட் சாலை உள்ளிட்ட பிரதான பகுதிகளில் மழைக்காலங்களில் வாய்க்கால்களில் மழைநீர் சீராகச் செல்ல முடியாமல் கடும் தடை ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இதனால் சாலைகளிலும் குடியிருப்புகளைச் சுற்றிலும் மழைநீர் தேங்கி பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இந்தப் புகார்களுக்குத் தீர்வு காணும் நோக்கில், தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்த் தனது இருசக்கர வாகனத்திலேயே தொகுதி முழுவதும் உள்ள முக்கிய வடிகால் வாய்க்கால்களைப் பார்வையிட்டார். அப்போது, வாய்க்கால்களுக்குள் மரங்களின் வேர்கள் அடர்ந்து வளர்ந்து மழைநீரின் சீரான ஓட்டத்திற்குத் தடையாக இருப்பதையும், பல இடங்களில் வாய்க்கால்களின் பக்கவாட்டுத் தடுப்புச் சுவர்கள் இடிந்து விழுந்து அடைப்பை ஏற்படுத்தியிருப்பதையும் அவர் கண்டறிந்தார்.

இதையடுத்து, மழைநீர் தடையின்றி வெளியேறும் வகையில் வாய்க்கால்களில் தேங்கியுள்ள அடைப்புகள், குப்பைகள் மற்றும் மரங்களின் வேர்களை உடனடியாக அகற்றவும், சேதமடைந்த தடுப்புச் சுவர்களைப் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கவும் பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். மழைக்காலம் தீவிரமடைவதற்கு முன்பாகவே அனைத்து வாய்க்கால்களையும் தூர்வாரிப் பராமரிப்புப் பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார்.

தொகுதி மக்களின் நீண்ட நாள் பிரச்னையான மழைநீர் தேக்கத்தைத் தடுக்க சட்டமன்ற உறுப்பினர் நேரடியாக இருசக்கர வாகனத்தில் களத்தில் இறங்கி ஆய்வு மேற்கொண்டு துரித நடவடிக்கை எடுத்து வருவது அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன