விளையாட்டு ஆசிரியர்கள் உள்ளிட்ட 327 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: முதல்வர் ரங்கசாமி தகவல்!
புதுச்சேரி, அக்.15: புதுச்சேரி அரசுத் துறைகளில் காலியாக உள்ள உடற்கல்வி மற்றும் விளையாட்டு ஆசிரியர்கள் உள்ளிட்ட 327 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளதாக முதலமைச்சர் ந. ரங்கசாமி அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். புதுச்சேரி அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை இயக்ககம் மற்றும் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியவை இணைந்து நடத்திய தேசிய விளையாட்டு நாள் மற்றும் ‘கேலோ புதுச்சேரி’ திருநாள் பரிசளிப்பு விழா கருவடிக்குப்பம் காமராஜர் மணி மண்டபத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்குப் பரிசுகளை வழங்கிப் பேசிய முதல்வர் ரங்கசாமி, அரசு துறைகளில் ஏற்கனவே 5,000 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாகவும், இதன் தொடர்ச்சியாக விளையாட்டு ஆசிரியர்கள் உள்ளிட்ட 327 இடங்கள் உடனடியாக நிரப்பப்படும் என்றும் அறிவித்தார். வெளிமாநிலங்களில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கச் செல்லும் புதுச்சேரி விளையாட்டு வீரர்களின் நலனுக்காகத் தனி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், வீரர்களுக்கான பயணச் செலவு உள்ளிட்ட சலுகைத் தொகைகள் அந்த நிதியிலிருந்து உடனடியாக விடுவிக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.
மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போதைப் பழக்கம் போன்ற தீய வழிகளில் செல்லாமல் தங்களை பாதுகாத்துக் கொள்ள விளையாட்டு இன்றியமையாதது என்று குறிப்பிட்ட முதல்வர், கிராமப்புறப் பள்ளிகளில் நவீன உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும், சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

