ஆரோவில்லில் அரசுப் பள்ளி மாணவர்களின் ஓவியக் கண்காட்சி: வியந்து பாராட்டி வாங்கிய வெளிநாட்டினர்!
புதுச்சேரி, அக். 12: புதுவையை அடுத்த இடையான்சாவடி அரசுப் பள்ளியைச் சேர்ந்த சிறுவர்களின் கலைப்படைப்புகள் அடங்கிய சிறப்புக் கண்காட்சி ஆரோவில்லில் நடைபெற்று வருகிறது. அரசுப் பள்ளி மாணவர்களின் அபார கற்பனைத் திறனைப் பிரதிபலிக்கும் இந்த ஓவியங்களை அங்குள்ள வெளிநாட்டினர் ஆர்வமுடன் பார்வையிட்டுப் பாராட்டி வருகின்றனர்.
இடையான்சாவடி அரசுப் பள்ளியில் பயிலும் 7 முதல் 13 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் உருவாக்கிய கலைப்படைப்புகள் ‘சிறு கலைஞன்’ என்ற தலைப்பில் ஆரோவில்லில் உள்ள மாஜி கலை அரங்கில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் தங்களின் கைவண்ணத்தில் கழிவுத் துணிகள், மண் மற்றும் இயற்கை வண்ணங்களைப் பயன்படுத்தி பிரமிக்கத்தக்க கலைப் படைப்புகளை உருவாக்கியுள்ளனர்.
ஒவ்வொரு மாணவரும் தனித்துவமான சிந்தனையில் இந்த ஓவியங்களை வடிவமைத்துள்ள நிலையில், ஆரோவில் பகுதியில் வசிக்கும் வெளிநாட்டுப் பயணிகள் மற்றும் குடியிருப்பாளர்கள் இக்கண்காட்சியை நேரில் பார்த்து பாராட்டி வருகின்றனர். மேலும், மாணவர்களின் திறமையை ஊக்குவிக்கும் வகையில் பல படைப்புகளை அதிக விலை கொடுத்தும் அவர்கள் வாங்கிச் சென்றுள்ளனர்.
கலை, கல்வி மற்றும் விளையாட்டு ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு மூலம் பின்தங்கிய சூழலில் உள்ள அரசுப் பள்ளி குழந்தைகளின் படைப்பாற்றலை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். நேரடிப் பயிலரங்குகள் மூலம் உருவான இக்கண்காட்சி, பள்ளிச் சிறுவர்களின் தனித்திறமைக்கான மிகப்பெரிய அங்கீகாரமாக அமைந்துள்ளது என ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.