புதுச்சேரி

புதுச்சேரி கடற்கரை சாலையில் சர்வதேச பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு: பதாகைகள் ஏந்தி உறுதிமொழி ஏற்பு!

புதுச்சேரி, அக். 12: சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி எழுச்சியுடன் நடைபெற்றது. பெண் குழந்தைகளின் உரிமைகள், பாதுகாப்பு, கல்வி மற்றும் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் நோக்கில் இந்நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ, மாணவிகள், குழந்தைகள், காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் திரளாகக் கலந்துகொண்டனர். பெண் குழந்தைகளின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கவும், இடைநிற்றலின்றி அவர்களது கல்வியை உறுதி செய்யவும், பாலின சமத்துவத்தை சமுதாயத்தில் நிலைநாட்டவும் விழிப்புணர்வு வாசகங்கள் முழங்கப்பட்டன.

தொடர்ந்து நிகழ்வில் பங்கேற்றவர்கள், ‘பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் கல்வியை உயர்த்துவோம், பாலின சமத்துவத்தை வளர்ப்போம், பாலியல் வன்கொடுமைகளை வேரறுப்போம்’ என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரும் கைகோர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

முன்னதாக புதுச்சேரி தன்னம்பிக்கை பொம்மலாட்டக் கலைக்குழுவினர் அனைவரையும் வரவேற்றனர். இந்நிகழ்வில் துரை ஆறுமுகம் ஐயா அறக்கட்டளையின் நிறுவனர் தனலட்சுமி, ஈன்றவர் இதயம் அறக்கட்டளை நிறுவனர் தமிழரசி, ஜெயதுர்கா பள்ளியின் தாளாளர் ஜெயந்தி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன