முத்தியால்பேட்டையில் ரூ.62 லட்சத்தில் புதிய சாலைகள்: எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் அடிக்கல் நாட்டினார்!
புதுச்சேரி, அக். 12: புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், சுமார் ரூ.62 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலைகள் அமைக்கும் பணிகளை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமியின் வழிகாட்டுதலின்படி, முத்தியால்பேட்டை தொகுதி முழுவதும் சாலை, குடிநீர், வடிகால் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் தீவிரமாக மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சோலை நகர், சிங்காரவேலர் நகரில் அமைந்துள்ள 6 குறுக்கு தெருக்களுக்கு ரூ.53 லட்சம் மதிப்பீட்டிலும், மாணிக்க முதலியார் வீதியில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டிலும் தார் சாலைகள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்கான பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது. இதில் தொகுதி எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் கலந்து கொண்டு முறைப்படி பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், சாலைப் பணிகளை விரைவாகவும், அதேசமயம் பொதுமக்களுக்கு எவ்வித போக்குவரத்து இடையூறும் ஏற்படாத வகையிலும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தரமாக முடித்துக் கொடுக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரர்களிடம் கண்டிப்புடன் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி நகராட்சி ஆணையர் ஸ்ரீஜித், நிர்வாகப் பொறியாளர் சிவபாலன், உதவிப் பொறியாளர் பழனிராஜா, இளநிலைப் பொறியாளர் சிவசுப்பிரமணியன் மற்றும் என்.ஆர். காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொகுதி பிரமுகர்கள், பொதுமக்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.