நீட், ஜேஇஇ தேர்வுகளில் சாதனை படைத்த புதுச்சேரி மாணவர்களுக்கு பாராட்டு: அமைச்சர் நமச்சிவாயம் உரை!
புதுச்சேரி: புதுச்சேரி கல்யாண் லான் & பேங்க்வெட் அரங்கில் அனஅகாடமி (Unacademy) புதுச்சேரி மையத்தின் சார்பில், தேசிய அளவிலான ஜேஇஇ (JEE) மற்றும் நீட் (NEET) தேர்வுகளில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளைப் பாராட்டி கௌரவிக்கும் வகையில் “இக்னைட் 2026” (IGNITE 2026 – எதிர்காலக் கனவுகளைச் சாதனைகளாக்குவோம்) பாராட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கு புதுச்சேரி உள்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு, மங்கள விளக்கேற்றி விழாவினைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற்று மருத்துவ மற்றும் பொறியியல் துறைகளில் தங்களது இலக்குகளை நோக்கி முன்னேறும் சாதனை மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் மற்றும் நினைவுப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் நமச்சிவாயம் பேசுகையில், “போட்டித் தேர்வுகள் நிறைந்த தற்காலக் கல்விச் சூழலில், புதுச்சேரி மாணவர்கள் தேசிய அளவில் தங்களது திறமையை நிரூபித்து வருவது பெருமைக்குரியது. விடாமுயற்சியும் முறையான திட்டமிடலும் இருந்தால் எந்தவொரு கடினமான போட்டித் தேர்விலும் எளிதில் வெற்றி பெற முடியும். மாணவர்களின் எதிர்காலக் கனவுகளை நனவாக்க ஆசிரியர்களும் பெற்றோர்களும் தொடர்ந்து பக்கபலமாக இருக்க வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக வழக்கறிஞர் லயன் என். அருண்குமார், அனஅகாடமி கோயம்புத்தூர் மற்றும் சென்னை மையங்களின் பாட்னர் ஆர். நவீன் பிரபு, புதுச்சேரி மற்றும் சென்னை மையங்களின் பாட்னர் திருமதி திவ்யா அருண்குமார் மற்றும் டாக்டர் விஜய் ஜெகநாதன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களை வாழ்த்திப் பேசினர். மேலும் பல்வேறு பள்ளிகளின் முதல்வர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் அனஅகாடமி நிறுவன நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்றனர்.
புதுச்சேரியில் அண்மையில் சென்டாக் மூலம் நீட் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை கலந்தாய்வுப் பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் உள்ளூர் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் இத்தகைய பாராட்டு விழாக்கள் நடத்தப்படுவது அவர்களது தன்னம்பிக்கையை மேலும் உயர்த்தும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்தனர்.


