புதுச்சேரி புனித சூசையப்பர் மருத்துவமனையில் 178-வது தொடர் மருத்துவக் கல்வி கருத்தரங்கம்: சிறுநீரகவியல் சிகிச்சை குறித்து விரிவான விளக்கம்!

புதுச்சேரி: புதுச்சேரி புனித சூசையப்பர் (குளூனி) மருத்துவமனையில் 178-வது தொடர் மருத்துவக் கல்வி (CME) கருத்தரங்கம் மருத்துவ வல்லுநர்கள், பேராசிரியர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (MGMCRI) சிறுநீரகவியல் துறை பேராசிரியர் டாக்டர் கல்யாண்ராம் கோன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, சிறுநீரகக் கோளாறுகள், குதிரைவாலி வடிவ சிறுநீரகம் (Horseshoe Kidney) மற்றும் காசநோய் பாதிப்புகள், தமனி குறைபாடுகளால் ஏற்படும் அடைப்பு யூரோபதி, நீரிழிவு நோயாளிகளில் ஏற்படும் பூஞ்சைத் தொற்று மற்றும் எம்பிஸிமாட்டஸ் பைலோனெப்ரிடிஸ் ஆகியவற்றின் தீவிரத்தன்மை குறித்து விளக்கினார். மேலும், நவீன மருத்துவ முறையான முற்றிலும் குழாய் இல்லா தோலடி சிறுநீரகக் கல் நீக்க அறுவை சிகிச்சை (Tubeless PCNL with Stent) குறித்தும் அவர் விரிவான விளக்கம் அளித்தார்.
முன்னதாக, புனித சூசையப்பர் மருத்துவமனையின் திட்ட இயக்குநர் டாக்டர் எச். ரங்கநாத் அனைவரையும் வரவேற்று, கருத்தரங்கின் நோக்கம் மற்றும் சிறப்புப் பேச்சாளரை அறிமுகப்படுத்தி உரையாற்றினார். தொடர்ந்து சிறப்பு விருந்தினர் டாக்டர் கல்யாண்ராம் கோனுக்கு திருமதி தேவகி பூங்கொத்து வழங்கினார்; திருமதி பங்காரு அம்மாள் சால்வை அணிவித்துக் கௌரவித்தார். தொடர்ந்து மருத்துவர் வந்தனா கல்யாண்ராம் கோன் பரிசுப் பெட்டகத்தையும், மருத்துவர் நலாம் நினைவுப் பரிசினையும் வழங்கினர்.
இக்கருத்தரங்கில் இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் பட்டமேற்படிப்பு நிறுவனம் (IGMCRI), அரசு மகப்பேறு மருத்துவமனை, மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி, பெருந்தலைவர் காமராஜர் மருத்துவக் கல்லூரி, அறுபடை வீடு மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவர்கள், ஆயுர்வேத, சித்தா, ஹோமியோபதி நிபுணர்கள், மருத்துவ மேற்படிப்பு மாணவர்கள், செவிலியர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
நிகழ்வின் நிறைவாக திரு இரா. கந்தசாமி நன்றியுரை ஆற்றினார். நவீன அறுவை சிகிச்சை மற்றும் சிறுநீரக நோய்களுக்கான நவீன சிகிச்சை முறைகளை இளம் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் அறிந்து கொள்ள இக்கருத்தரங்கம் பெரிதும் பயனுள்ளதாக அமைந்தது.


