புதுச்சேரி

புதுச்சேரியில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து ‘ஆளுக்கொரு திருக்குறள்’ முழங்கும் 399-வது தொடர் நிகழ்வு!

புதுச்சேரி: புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள திருவள்ளுவர் சிலை வளாகத்தில், மாதந்தோறும் தவறாமல் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘ஆளுக்கொரு திருக்குறள்’ தொடர் நிகழ்வின் 399-வது நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (11.10.2026) காலை எழுச்சியுடன் நடைபெற்றது. புதுச்சேரி மண்ணில் திருவள்ளுவர் திருவுருவச் சிலை நிறுவப்பட்ட நாள் முதலாக, ஒவ்வொரு மாதமும் 11-ஆம் தேதியன்று காலை 7.00 மணிக்குத் தமிழ் ஆர்வலர்கள் ஒன்றுகூடி சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் கூறும் வழக்கம் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இன்றைய தினம் நடைபெற்ற 399-வது நிகழ்வானது புலவர் செ. இராமலிங்கம் அவர்களின் வழிகாட்டுதலின்படி, வேணு. ஞானமூர்த்தி தலைமையில் சீரோடும் சிறப்போடும் நடைபெற்றது. முன்னதாக அய்யன் திருவள்ளுவர் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, மலர்கள் தூவி உணர்வுப்பூர்வமாகப் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ் உணர்வாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த திருக்குறள்களையும் அதன் கருத்துக்களையும் வரிசையாக முழங்கினர்.

இந்நிகழ்வில் ஓவியம் தமிழ்ச்செல்வி, பொ. வெள்ளிக்கண்ணன் ஆகியோர் ‘ஒழுக்கம் விழுப்பம் தரலான்’ (குறள் 131) எனும் குறளையும், வி. அரசகுமரன் ‘யாகாவா ராயினும் நாகாக்க’ (குறள் 127) குறளையும் எடுத்துரைத்தனர். தொடர்ந்து ஓவியர் அன்பழகன் ‘வினைத்திட்பம்’ (குறள் 661), இறை. செழியன் ‘காதன்மை கந்தா’ (குறள் 507), கோ.மு. தமிழ்ச்செல்வன் ‘முறைசெய்து காப்பாற்றும் மன்னவன்’ (குறள் 388), வேணு. ஞானமூர்த்தி ‘தீயினாற் சுட்டபுண்’ (குறள் 129), தாசு நிர்மலா ‘புறந்தூய்மை நீரான் அமையும்’ (குறள் 298) மற்றும் தோழர் இரா. சீனுவாசன் ‘அன்பிலார் எல்லாந் தமக்குரியர்’ (குறள் 72) ஆகிய அறநெறிக் குறட்பாக்களைக் கூறி விளக்கினர்.

மேலும், புதுவைத் தமிழ்நெஞ்சன் காணொளி வாயிலாகப் பங்கேற்று, ‘உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேராது இயல்வது நாடு’ (குறள் 734) என்ற குறளை முழங்கி, நிகழ்வில் பங்கேற்ற தமிழ் அறிஞர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் தனது நன்றியினைத் தெரிவித்தார். தமிழ் மொழியின் பெருமையையும் உலகப் பொதுமறையாம் திருக்குறளின் அறக்கருத்துக்களையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் நோக்கில், தடங்கலின்றி 399 மாதங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த இலக்கிய முயற்சி புதுச்சேரி தமிழன்பர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன