புதுச்சேரி துமாஸ் வீதி குடியிருப்பாளர்கள், வியாபாரிகளுக்கு சிறப்பு அடையாள அட்டை: முதுநிலை எஸ்பி திவ்யா உறுதி!
புதுச்சேரி, அக். 8:
பிரபல சுற்றுலாத் தலமான புதுச்சேரிக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர். குறிப்பாக வார இறுதி நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை பல மடங்கு அதிகரிப்பதால், ஒயிட் டவுன் மற்றும் கடற்கரைச் சாலை பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்கள் வாகனங்களை குடியிருப்பு வீதிகளில் கண்டபடி நிறுத்துவதால், உள்ளூர் மக்கள் மற்றும் வணிகர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.
இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக, கிழக்கு போக்குவரத்துப் பிரிவு போலீசார் துமாஸ் வீதி மற்றும் கடற்கரைச் சாலை சந்திப்புகளில் தடுப்புக் கட்டைகளை (பேரிகார்டுகள்) அமைத்து வெளி வாகனங்களின் நுழைவைத் தடுத்து வந்தனர். ஆனால், இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் கடை வைத்துள்ள வியாபாரிகள் தங்களது சொந்த வாகனங்களைக்கூட தங்கள் பகுதிகளுக்கு எடுத்துச் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினர். நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டிய கட்டாயமும், அவசர காலங்களில் வெளியே வர முடியாத சூழலும் நிலவியது.
இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், புதுச்சேரி கிழக்கு போக்குவரத்து காவல் சரகம் சார்பில் துமாஸ் வீதி குடியிருப்பாளர்கள் மற்றும் வியாபாரிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் போக்குவரத்து காவல் நிலையத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு முதுநிலை காவல் கண்காணிப்பாளர் (SSP) திவ்யா தலைமை தாங்கினார். காவல் கண்காணிப்பாளர் ரக்சனா சிங், ஆய்வாளர் வேலய்யன் மற்றும் உதவி ஆய்வாளர்கள் அன்சர் பாட்சா, ஆறுமுகம், கொண்டா பாலாஜி, மகேஸ்வரராவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் பங்கேற்ற துமாஸ் வீதி மக்கள், தங்களுக்கு காவல்துறையின் சார்பில் பிரத்யேக அடையாள அட்டை வழங்கினால், அதனைப் போக்குவரத்து போலீசாரிடம் காண்பித்துவிட்டுத் தடையின்றி தங்களது வாகனங்களை குடியிருப்புகளுக்கும் கடைகளுக்கும் எடுத்துச் செல்ல ஏதுவாக இருக்கும் என்று கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த முதுநிலை காவல் கண்காணிப்பாளர் திவ்யா, அப்பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு விரைவில் உரிய அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

