புதுச்சேரி

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: 80.81% வாக்குகள் பதிவு; 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பில் வாக்குப்பதிவு எந்திரங்கள்!

புதுச்சேரி, அக். 7:
புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டுள்ளன.

கடந்த பொதுத்தேர்தலில் தட்டாஞ்சாவடி, மங்கலம் ஆகிய இரு தொகுதிகளில் வெற்றி பெற்ற முதல்வர் ரங்கசாமி, தட்டாஞ்சாவடி தொகுதியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் என்.ஆர்.காங்கிரஸ், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 11 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். காலையில் விறுவிறுப்பாக தொடங்கிய வாக்குப்பதிவு மாலையில் சுமுகமாக நிறைவடைந்தது. இத்தொகுதியில் மொத்தம் உள்ள 26,921 வாக்காளர்களில் 21,756 பேர் வாக்களித்ததன் மூலம் 80.81 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, 31 வாக்குச்சாவடிகளில் இருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் (EVM) மற்றும் விவிபாட் எந்திரங்கள் அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டன. பின்னர் பலத்த பாதுகாப்புடன் லாஸ்பேட்டை மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

அங்குள்ள ஸ்ட்ராங் ரூமில் வாக்கு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, துணை ராணுவம், புதுச்சேரி ஆயுதப்படை மற்றும் உள்ளூர் போலீசாரின் 3 அடுக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேர தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வருகிற 9-ம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன