தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கு ரூ.67.30 லட்சம் நலத்திட்ட உதவிகள்: எம்.பி. கனிமொழி வழங்கினார்!

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் ஒன்றிய அரசின் சமூகநீதி துறை மற்றும் மத்திய பொதுத்துறை நிறுவனமான அலிம்கோ (ALIMCO) சார்பில் முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு சமூக மேம்பாட்டு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு, பயனாளிகளுக்குத் தேவையான பல்வேறு உதவி உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த நலத்திட்ட முகாம் ஒருங்கிணைக்கப்பட்டது. இதில் தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களின் அன்றாட செயல்பாடுகளுக்குத் தேவையான நவீன உபகரணங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் மொத்தம் 638 மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு, ரூ.67.30 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உபகரணங்கள் மற்றும் உதவிகளை எம்.பி. கனிமொழி கருணாநிதி பயனாளிகளிடம் நேரில் வழங்கினார். தேவையான உபகரணங்கள் உரிய நேரத்தில் கிடைத்ததற்குப் பயனாளிகள் தங்களது நெகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கா. கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் மாவட்ட வருவாய் அலுவலர் மூ. குருச்சந்திரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சி. காமாட்சி மற்றும் துறை சார்ந்த அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
எளிய மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை முழுமையாகக் கண்டறிந்து, அவர்களுக்குத் தடையின்றி நலத்திட்டங்களைச் சேர்ப்பதில் அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது என இந்நிகழ்வில் சுட்டிக்காட்டப்பட்டது.


