தமிழ்நாடு

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் உச்சவரம்பு அதிரடி உயர்வு: ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன்!

சென்னை, அக். 05: கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நகைக் கடன்களுக்கான வரம்பு ஒரு கிராமுக்கு அதிகபட்சமாக ரூ.10,000 வரை உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் இயங்கும் கூட்டுறவு நிறுவனங்களில் நகைக் கடன்களுக்கு வழங்கப்பட்டு வந்த கடன் தொகை தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் அதிகபட்சமாக ஒரு கிராமுக்கு ரூ.7,000 அல்லது சந்தை மதிப்பில் 75 சதவீதம் வரை கடன் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போதைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி நகைக் கடன்களுக்கு ஒரு கிராம் தங்கத்திற்கு அதிகபட்சமாக ரூ.10,000 வரை அல்லது சந்தை மதிப்பில் 75 சதவீதம் வரை கடன் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்களுக்கிடையேயான வட்டி விகித வேறுபாடுகளைக் களையும் வகையில் புதிய சீரமைப்பு நடைமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மைச் சங்கங்களுக்கு வழங்கும் வட்டி விகிதம் மத்திய வங்கிகளின் பொதுக் கடன் வட்டியை விடக் குறைந்தபட்சம் 1.25% குறைவாக இருக்க வேண்டும் எனவும், சங்கங்களின் லாப வரம்பு 2.25 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய கடன் உச்சவரம்பு உயர்வு புதிதாக விண்ணப்பிக்கும் நகைக் கடன்கள் மட்டுமின்றி, தற்போது புதுப்பிக்கப்படும் நகைக் கடன்களுக்கும் முழுமையாகப் பொருந்தும் என்று கூட்டுறவுத்துறை துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன