புதுச்சேரி

அசோக் ஆனந்தன் வெற்றி பெற்றால் அரசின் துணையுடன் திட்டங்களை நிறைவேற்றுவார்: தட்டாஞ்சாவடியில் முதலமைச்சர் ரங்கசாமி உறுதி

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்தனை ஆதரித்து முதலமைச்சர் ந.ரங்கசாமி தலைமையில் நேற்று இறுதிக்கட்ட பிரம்மாண்ட இருசக்கர வாகன பிரச்சார பேரணி நடைபெற்றது. தொகுதியின் பல்வேறு முக்கிய வீதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் வழியாகச் சென்ற இப்பேரணியின் நிறைவில், பொதுமக்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மத்தியில் முதலமைச்சர் ரங்கசாமி சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, “இந்திய அளவில் மக்கள் நலத்திட்டங்களை முழுமையாகவும் சிறப்பாகவும் செயல்படுத்துவதில் புதுச்சேரி அரசு முதன்மை இடத்தில் உள்ளது. மக்களின் தேவைகளை உணர்ந்து, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. தட்டாஞ்சாவடி மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பான வெங்கடேஸ்வரா நகர் வாய்க்கால் தூர்வாரும் மற்றும் புனரமைப்பு பணிகள் விரைவில் போர்க்கால அடிப்படையில் முடிக்கப்படும். இந்தப் பணிகளை நமது வேட்பாளர் அசோக் ஆனந்தன் முன்னின்று கண்காணித்து நிறைவேற்றுவார்” என்றார்.

மேலும் பேசிய அவர், புதுச்சேரியின் அனைத்துப் பகுதிகளுக்கும் தடையின்றி பாதுகாக்கப்பட்ட சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் தட்டாஞ்சாவடி பகுதியில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கப்படும் என்றும் உறுதியளித்தார். வெறும் வாய்வார்த்தை வாக்குறுதிகளை மட்டுமே நம்பாமல், ஆளும் அரசுடன் இணைந்து தொகுதி வளர்ச்சிப் பணிகளை முன்னெடுத்துச் செல்லும் ஆற்றல் கொண்ட என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்தனுக்கு ‘ஜக்’ சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு முதலமைச்சர் ரங்கசாமி பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன