தேசியம்

தூய்மையே சேவை இயக்கம் மக்கள் இயக்கமாக மாற வேண்டும்: ஐஐஎம்சி வளாகத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேச்சு

புதுடெல்லி: புதுடெல்லியில் உள்ள இந்திய மக்கள் தகவல் தொடர்பு நிறுவனத்தில் (ஐஐஎம்சி) நடைபெற்ற ‘தூய்மையே சேவை’ பிரச்சார விழிப்புணர்வு மற்றும் மரக்கன்று நடும் நிகழ்வுகளில் மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் ஐஐஎம்சி ஆசிரியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் இந்திய தகவல் பணி (ஐஐஎஸ்) பயிற்சி அதிகாரிகள் திரளாக பங்கேற்றனர். நிகழ்ச்சியின் தொடக்கமாக அமைச்சர் தலைமையில் அனைவரும் தூய்மை உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.

தொடர்ந்து, ‘தாயின் பெயரில் ஒரு மரம்’ (Ek Ped Maa Ke Naam) திட்டத்தின் கீழ் கல்லூரி வளாகத்தில் அமைச்சர் மரக்கன்றை நட்டு வைத்தார். பின்னர் மாணவர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் உரையாற்றிய அமைச்சர் எல். முருகன், கடந்த 2014-ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தூய்மை பாரத இயக்கத்தைத் தொடங்கியபோது, தூய்மை என்பதை வெறும் அரசுத் திட்டமாக மட்டும் சுருக்கிவிடாமல், ஒட்டுமொத்த மக்களின் மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டிருந்தார் என்று நினைவு கூர்ந்தார். தூய்மையை ஒவ்வொரு குடிமகனும் தங்களது அன்றாடப் பழக்கமாக மாற்றிக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை அவர் விரிவாக எடுத்துரைத்தார். தொடர்ந்து மாணவர்களுடன் கலந்துரையாடிய அவர், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மரங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

வெறும் மரக்கன்றுகளை நடுவதோடு நமது கடமை முடிந்துவிடுவதில்லை என்றும், நடப்பட்ட மரங்கள் முழுமையாக வளர்ந்து பலனளிக்கும் வரை தொடர்ந்து உரிய முறையில் பராமரித்து பாதுகாப்பது மிகவும் அவசியமானது என்றும் வலியுறுத்தினார். தகவல் தொடர்பு துறையில் பயிலும் இளம் தலைமுறையினர் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் முன்னணியில் திகழ வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன