தேசியம்

விமானத்தில் கத்திக்குத்து தாக்குதல்: 174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி சுமித் மச்சர்!

புதுதில்லி: நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தின் காக்பிட் பகுதியில் நடத்தப்பட்ட கொடூர கத்திக்குத்து தாக்குதலுக்கு மத்தியிலும், துணிச்சலாகச் செயல்பட்டு 174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய கேப்டன் சுமித் மச்சருக்கு சர்வதேச அளவில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

ஃப்ளைதுபாய் (flydubai) நிறுவனத்திற்குச் சொந்தமான ‘ஃப்ளைட் 1073’ பயணிகள் விமானத்தை இந்தியரான கேப்டன் சுமித் மச்சர் இயக்கினார். விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக விமானி அறைக்குள் (Cockpit) நுழைந்த மர்ம நபர் ஒருவர் கேப்டன் சுமித் மீது திடீரென கத்தியால் பயங்கர தாக்குதல் நடத்தினார். இதில் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது.

கடுமையான ரத்தப்போக்கு மற்றும் ஆபத்தான காயங்கள் ஏற்பட்ட நிலையிலும், சிறிதும் மனந்தளராத கேப்டன் சுமித், உடனடியாக காக்பிட் கதவின் பூட்டைத் திறந்தார். இதையடுத்து விமானத்திலிருந்த இஸ்ரேலிய பயணிகள் மற்றும் எமிராட்டி (ஐக்கிய அரபு அமீரக) விமானப் பணியாளர்கள் உடனே உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தியவரை மடக்கிப் பிடித்தனர்.

இந்திய விமானியின் இந்த உடனடி சாமர்த்தியமான முடிவால் விமானத்தில் இருந்த 174 பயணிகளின் உயிர்களும் பெரும் அசம்பாவிதமின்றி பாதுகாப்பாகக் காப்பாற்றப்பட்டன. படுகாயமடைந்த கேப்டன் சுமித் தற்போது தீவிர மருத்துவச் சிகிச்சையில் உள்ளார்.

இந்த வீரதீரச் செயலைப் பாராட்டியுள்ள இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம், “கடுமையான காயங்களுக்கு மத்தியிலும் இந்திய விமானி, இஸ்ரேலிய பயணிகள் மற்றும் எமிராட்டி குழுவினர் இணைந்து காட்டிய ஈடு இணையற்ற தைரியம் 174 உயிர்களைக் காப்பாற்றியுள்ளது; கேப்டன் சுமித் விரைவில் பூரண குணமடைய வாழ்த்துகிறோம்” என்று அதிகாரப்பூர்வமாகப் புகழாரம் சூட்டியுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன