தேசியம்

துபாய் – டெல் அவிவ் நடுவானில் விமான கடத்தல் முயற்சி முறியடிப்பு: 180 பேரின் உயிரைக் காப்பாற்றிய இந்திய பைலட் ஸ்மித் பச்சார்!

புதுடெல்லி: துபாயிலிருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நோக்கிப் பயணித்த பிளை துபாய் விமானத்தில் நடுவானில் அரங்கேறவிருந்த பயங்கர விமான கடத்தல் முயற்சியை, இந்திய தலைமை விமானி தனது வீரதீரச் செயலால் துணிச்சலாக முறியடித்துள்ளார். இந்தச் சாதுரியமான செயலால் விமானத்திலிருந்த 180 பயணிகளின் உயிர்கள் மயிரிழையில் காப்பாற்றப்பட்டுள்ளன.

துபாயில் இருந்து புறப்பட்ட பிளை துபாய் விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்த போது, அதன் சீனியர் பைலட்டான இந்தியாவைச் சேர்ந்த ஸ்மித் பச்சார் என்பவரை சக விமானி திடீரென கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளார். விமானத்தை தனது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, தரையில் மோதி வெடிக்கச் செய்யும் நாசவேலைத் திட்டத்துடன் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

பலமுறை கத்திக்குத்து விழுந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய போதிலும், பைலட் ஸ்மித் பச்சார் அசாதாரண மனத்துணிச்சலுடன் செயல்பட்டு காக்பிட் கதவைத் திறந்துவிட்டார். காக்பிட் கதவு திறக்கப்பட்ட அடுத்த நொடியே, விமானத்திலிருந்த பயணிகள் அனைவரும் ஒன்றிணைந்து பாய்ந்து சென்று கடத்தல் முயற்சியில் ஈடுபட்ட சக விமானியை உடனடியாக வளைத்துப் பிடித்துக் கட்டினர்.

அவசர கால தற்காப்பு, ராணுவப் பயிற்சி மற்றும் முதலுதவி சிகிச்சை முறைகளில் சிறந்த அனுபவம் கொண்ட இஸ்ரேலியப் பயணிகள் பலரும் விமானத்தில் இருந்ததால், நிலைமை உடனடியாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதற்கிடையே கடத்தல் அபாய சிக்னல் கிடைத்த அடுத்த கணமே இஸ்ரேல் தனது போர் விமானங்களை வானில் அனுப்பி பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தியது.

விமானம் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டதும், பயணிகளை மீட்க இஸ்ரேல் சிறப்பு விமானங்களை அனுப்பியதுடன், உயிர் தப்பிய பயணிகளை அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். படுகாயமடைந்த நிலையிலும் 180 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி ஸ்மித் பச்சாருக்கு உலகெங்கிலும் உள்ள மக்கள் தங்களது பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் குவித்து வருகின்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன