புதுச்சேரி சட்டமன்றத்தை முற்றுகையிட்ட மீனவர்கள்: அமைச்சர் மல்லாடியை மிரட்டிய எம்.எல்.ஏ. நேருவை குண்டாஸில் கைது செய்ய 24 மணி நேர கெடு!
புதுச்சேரி:
புதுச்சேரியில் மீன்வளத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவை மிரட்டியதாக உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நேரு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அவரைக் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி மீனவ பஞ்சாயத்தார் மற்றும் மீனவர்கள் சட்டமன்றத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக, புதுச்சேரி மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு வருவதாகக் குற்றம்சாட்டி, உருளையன்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில் அவரது ஆதரவாளர்கள் சட்டமன்ற வளாகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். அப்போது, அலுவல் பணிகளுக்காக சட்டமன்றத்திற்கு வருகை தந்த மீன்வளத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவிடம் எம்.எல்.ஏ. நேரு மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதத்தின் போது, அமைச்சரை அச்சுறுத்தும் மற்றும் மிரட்டும் வகையில் நேரு பேசியதாகத் தகவல்கள் வெளியாகின.
இச்சம்பவம் புதுச்சேரி அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தகவல் அறிந்த அனைத்து மீனவ கிராம பஞ்சாயத்து நிர்வாகிகள் மற்றும் மீனவர்கள் சட்டமன்றத்திற்குத் திரண்டு வந்தனர். அமைச்சரை ஒரு சட்டமன்ற உறுப்பினர் பொது இடத்தில் மிரட்டியதைக் கண்டித்து, மாலையில் சட்டமன்ற வளாகத்தை மீனவர்கள் முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினர்.
போராட்டத்தின் போது மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவிக்கையில், “பொதுப்பணியில் உள்ள அமைச்சரை மிரட்டும் வகையில் செயல்பட்ட உருளையன்பேட்டை எம்.எல்.ஏ. நேருவை காவல்துறை அடுத்த 24 மணி நேரத்திற்குள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில், ஒட்டுமொத்த மீனவ சமுதாயத்தையும் ஒருங்கிணைத்துப் புதுச்சேரி மாநிலமே ஸ்தம்பிக்கும் வகையில் மாபெரும் போராட்டங்களை முன்னெடுப்போம்” என்று அரசுக்கும் காவல்துறைக்கும் திட்டவட்டமாக எச்சரிக்கை விடுத்தனர். இதனால் சட்டமன்ற வளாகப் பகுதியில் கடுமையான பதற்றமான சூழல் நிலவியது.


