சென்னையில் போதைப்பொருள் மற்றும் சைபர் குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வு முகாம்: 3,500 கல்லூரி மாணவர்கள் உறுதிமொழி!

சென்னை: தமிழக அரசால் முன்னெடுக்கப்பட்டு வரும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சென்னை பெருநகர காவல் துறை சார்பில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பல்வேறு சிறப்பு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, கோயம்பேட்டில் உள்ள புனித தோமையர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (St. Thomas College of Arts & Science) வளாகத்தில் போதைப்பொருட்கள் மற்றும் சைபர் குற்றங்களுக்கு எதிரான மாபெரும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் A. அமல்ராஜ், இ.கா.ப., துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், கஞ்சா, ஆல்கஹால், போதை மாத்திரைகள் மற்றும் செயற்கை போதைப்பொருட்களைப் பயன்படுத்துவது கடுமையான உடல்நலப் பாதிப்புகளையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்துவதோடு, எதிர்கால வாழ்க்கையையே பாழாக்கிவிடும் என்று எச்சரித்தார். ‘போதையில்லா தமிழ்நாடு’ என்ற இலக்கை அடைய மாணவர்களின் பங்களிப்பு இன்றியமையாதது என அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், தற்காலத்தில் அதிகரித்து வரும் ஆன்லைன் பண மோசடி, டிஜிட்டல் கைது அச்சுறுத்தல்கள், ஆன்லைன் வர்த்தகம் மற்றும் இணையதள விளையாட்டுகள் வாயிலாக நிகழும் சைபர் குற்றங்கள் குறித்தும், அவற்றில் சிக்காமல் மாணவர்கள் எவ்வாறு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பது குறித்தும் காவல் ஆணையாளர் விரிவாக விளக்கினார். அத்துடன், சாலைப் பாதுகாப்பு மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்லும்போது கட்டாயம் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ‘I am against Drug’ என்ற தலைப்பிலான மௌன மொழி நாடகம், சைபர் மோசடிகள் குறித்த விழிப்புணர்வு மேஜிக் ஷோ, விழிப்புணர்வு காணொளிப் பாடல்கள் ஆகியவை திரையிடப்பட்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டப்பட்டது. தொடர்ந்து காவல் ஆணையாளர் தலைமையில் சுமார் 3,500 கல்லூரி மாணவ, மாணவிகள் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் (வடக்கு) திரு. கபில் குமார் சி சராட்கர், மேற்கு மண்டல காவல் இணை ஆணையாளர் திருமதி. திஷா மிட்டல், கோயம்பேடு துணை ஆணையாளர் திரு. குணால் உத்தம் ஷ்ரோத்தி, கல்லூரி செயலாளர் திரு. பிஜு சாக்கோ, கல்லூரி முதல்வர் திருமதி. ப்ளோரன்ஸ் உள்ளிட்ட பேராசிரியர்கள் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.



