தமிழ்நாடு

உயிரைப் பணயம் வைத்து கடத்தல்காரர்களைப் பிடித்த தலைமைக் காவலர் வேல்முருகன்: தலைமைச் செயலகத்திற்கு நேரில் அழைத்து முதலமைச்சர் பாராட்டு!

சென்னை:

சுமார் 40 கிலோமீட்டர் தூரம் காரின் மேற்கூரையில் படுத்தபடியே உயிரைப் பணயம் வைத்து சென்று கடத்தல்காரர்களைப் பிடித்த தலைமைக் காவலர் ம.வேல்முருகன் அவர்களை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமைச் செயலகத்திற்கு நேரில் அழைத்து மனதாரப் பாராட்டியுள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்டம், கோவில்பாளையம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வருபவர் திரு. ம.வேல்முருகன். இவர் தடைசெய்யப்பட்ட பொருட்களை வாகனத்தில் கடத்திச் சென்ற சமூக விரோதிகளைப் பிடிக்கத் துணிச்சலுடன் களமிறங்கினார். அப்போது கடத்தல் காரர்கள் தப்பியோட முயன்ற நிலையில், சிறிதும் தயங்காமல் அவர்களின் காரின் மேற்கூரையில் படுத்தபடியே சுமார் 40 கிலோமீட்டர் தூரம் வரை துரத்திச் சென்று, அவர்களைக் கைது செய்வதற்கு முதன்மைக் காரணமாக விளங்கினார்.

காவல்துறையினரின் கடமை உணர்விற்கும், பொதுமக்களின் பாதுகாப்பிற்கும் மிகச்சிறந்த முன்னுதாரணமாக அமைந்த இந்த அசாதாரண வீர தீரச் செயலை தமிழ்நாடு அரசு வெகுவாகப் பாராட்டியுள்ளது. இந்நிலையில், இன்று தலைமைக் காவலர் வேல்முருகனை சென்னை தலைமைச் செயலகத்திற்கு நேரில் வரவழைத்த முதலமைச்சர், அவரது துணிச்சலான செயல்பாட்டை வெகுவாகப் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் குற்றவாளிகளைப் பிடிப்பதில் தீரத்துடன் செயல்பட்ட காவலரின் இத்தகைய அர்ப்பணிப்பு உணர்வு ஒட்டுமொத்த காவல்துறைக்கும் பெருமை சேர்த்துள்ளதோடு, பொதுமக்களிடையேயும் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன