ஒப்பந்தப் பணி வழங்காததைக் கண்டித்து புதுவை பல்கலைக்கழகத்தில் முன்னாள் டீனின் மனைவி தர்ணா போராட்டம்!
புதுச்சேரி, செப். 22:
புதுச்சேரி காலாப்பட்டில் இயங்கி வரும் மத்திய பல்கலைக்கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்த்துறையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பேராசிரியராகப் பணியாற்றி வந்தவர் பொற்கலை. இவரது ஒப்பந்தக் காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அவர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
பொற்கலையின் கணவர் புதுவை பல்கலைக்கழகத்திலேயே டீனாகப் பணியாற்றி வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனிடையே, பொற்கலையின் பணிக்காலம் முடிவடைந்த நிலையில், பல்கலைக்கழகத்தில் புதிதாக ஒப்பந்த அடிப்படையிலான பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால், இதில் பொற்கலைக்கு மீண்டும் பணி வாய்ப்பு வழங்கப்படவில்லை.
கணவர் உயிரிழந்த நிலையில், தனக்குக் கருணை அடிப்படையிலாவது ஒப்பந்தப் பேராசிரியர் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்திய பொற்கலை, பல்கலைக்கழக நிர்வாகம் பணி வழங்காததால் மிகுந்த மனவேதனை அடைந்தார். இதனைத் தொடர்ந்து, இன்று புதுவை பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை அலுவலகம் அருகே அவர் திடீரென தரையில் அமர்ந்து பதாகைகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
முன்னாள் டீனின் மனைவியே பல்கலைக்கழக வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவலறிந்த சக பேராசிரியர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து அவருடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவரை பல்கலைக்கழக உயர் நிர்வாகத்தினரிடம் அழைத்துச் சென்று முறையிட வைத்தனர். இதனைத் தொடர்ந்து அவரிடம் நிர்வாகத் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

