வில்லியனூர் தொகுதி பாதுகாப்புக்காக 170 சிசிடிவி கேமராக்கள்: போலீஸ் எஸ்.பி.யிடம் வழங்கினார் ரவிக்குமார் எம்.எல்.ஏ.!

வில்லியனூர், செப். 19:
வில்லியனூர் தொகுதி முழுவதும் குற்றச் செயல்களைத் தடுத்து சட்டம் ஒழுங்கைப் பலப்படுத்தும் நோக்கில், முக்கிய வழித்தடங்களில் பொருத்தப்படவுள்ள 170 அதிநவீன சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை தொகுதி எம்.எல்.ஏ. ரவிக்குமார் மேற்கு பகுதி காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) சுப்ரமணியனிடம் ஒப்படைத்தார்.
வில்லியனூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வியாபாரிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் பிரபாகர், மேற்கு பகுதி எஸ்.பி. சுப்ரமணியன் மற்றும் போக்குவரத்து, மகளிர், சட்டம்-ஒழுங்கு காவல் அதிகாரிகள் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில் 80-க்கும் மேற்பட்ட உள்ளூர் வியாபாரிகள் கலந்துகொண்டு மாமூல் தொல்லைகள், டிரேட் லைசென்ஸ் பிரச்சனைகள் மற்றும் மாட வீதிகளில் சாலையோர கடைகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்கள் குறித்து விரிவாகப் புகார் தெரிவித்தனர்.
வியாபாரிகளின் புகார்களைக் கேட்டறிந்த ரவிக்குமார் எம்.எல்.ஏ., அனைத்துப் பிரச்சனைகளுக்கும் உடனடியாகத் தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார். அதனைத் தொடர்ந்து, தொகுதியின் பாதுகாப்பு கருதி தனது சொந்த செலவில் கொள்முதல் செய்யப்பட்ட 170 நவீன சிசிடிவி கேமராக்களைக் காவல் துறையிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வர்த்தக சங்க நிர்வாகிகள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் வியாபாரிகள் பலர் பங்கேற்றனர்.

