புதுச்சேரியில் புதிய ராமகிருஷ்ண மடம் மற்றும் திருமூவர் கோயில் திறப்பு விழா: பக்தர்களுக்கு அழைப்பு

புதுச்சேரி ராமகிருஷ்ண மடத்தின் புதிய கட்டட வளாகம் மற்றும் திருமூவர் புதிய கோயிலின் திறப்பு விழா அக்டோபர் 10-ஆம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளதாக சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடம் அறிவித்துள்ளது.
சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் கிளை மையமாகத் திகழும் புதுச்சேரி ராமகிருஷ்ண மடம், கடந்த 2022-ஆம் ஆண்டு ஒரு சிறிய வாடகை வீட்டில் தொடங்கப்பட்டு ஆன்மிகப் பணிகளை மேற்கொண்டு வந்தது. தற்போது மடத்திற்குச் சொந்தமான புதிய கட்டட வளாகம் உருவாக்கப்பட்டு, அங்கு முழுமையாக இடம் பெயர உள்ளது.
இப்புதிய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘திருமூவர் புதிய கோயிலை’ வரும் அக்டோபர் மாதம் 10-ஆம் தேதி சனிக்கிழமை காலை 7 மணியளவில், பரம பூஜனிய ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்தாஜி மகராஜ் திறந்து வைத்து, துறவியர்கள் மற்றும் பக்தர்களுக்காக அர்ப்பணிக்க உள்ளார். தொடர்ந்து அன்று மாலை 4:30 மணியளவில் சிறப்புப் பொதுக்கூட்டம் மற்றும் ஆன்மிக சொற்பொழிவுகள் நடைபெற உள்ளன.
இத்திருவிழாவில் பங்கேற்க வரும் வெளி ஊர் பக்தர்களின் வசதிக்காக, அக்டோபர் 9-ஆம் தேதி மாலை 3 மணி முதல் அக்டோபர் 11-ஆம் தேதி அதிகாலை வரை அருகிலுள்ள திருமண மண்டபத்தில் தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் தங்க விரும்பும் பக்தர்கள் மடத்தின் அலுவலகத்தில் ரூ. 500 செலுத்தி அல்லது க்யூஆர் கோடு மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என மடத்தின் தலைவர் சுவாமி சத்யஞானானந்தர் தெரிவித்துள்ளார்.
