புதுச்சேரி

ஜிப்மரின் முன்னாள் மாணவர் டாக்டர் அருண் பாபுவுக்கு தேசிய ஆசிரியர் விருது: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்!

புதுச்சேரி, செப். 13: ஆசிரியர் தினத்தை முன்னிட்டு புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்ற தேசிய அளவிலான விழாவில், புதுச்சேரி ஜிப்மரின் முன்னாள் மாணவரும், மங்களகிரி எய்ம்ஸ் குழந்தைகள் நலத்துறைத் தலைவருமான டாக்டர் அருண் பாபுவுக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசிய ஆசிரியர் விருதை வழங்கி கௌரவித்தார். மருத்துவக் கல்வி, நவீன மருத்துவ ஆராய்ச்சி மற்றும் எதிர்கால மருத்துவர்களை உருவாக்குவதில் இவரது வாழ்நாள் பங்களிப்பைப் போற்றும் வகையில் இந்த உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.

டாக்டர் அருண் பாபு புதுச்சேரி ஜிப்மரில் இளநிலை மருத்துவக் கல்வியான எம்பிபிஎஸ் (1999-2004) மற்றும் குழந்தைகள் நல மருத்துவத்தில் எம்டி (2006-2009) பட்டங்களைப் பெற்றவர் ஆவார். கனடாவின் கல்கரி பல்கலைக்கழகத்தில் சிறப்பு ஃபெல்லோஷிப் முடித்துள்ள இவர், தற்போது ஆந்திர மாநிலம் மங்களகிரி எய்ம்ஸ் மருத்துவமனையில் பேராசிரியராகவும் துறைத் தலைவராகவும் சிறப்பாகப் பணியாற்றி வருகிறார்.

சிறந்த கல்வியாளரான டாக்டர் அருண் பாபு, மருத்துவர்களுக்கான 34 மருத்துவ நூல்களை எழுதியுள்ளார். இந்நூல்கள் உலகளவில் 2.30 லட்சத்துக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளன. மேலும் 110 ஆராய்ச்சித் திட்டங்கள், 430-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் குழந்தைகளுக்கான தலைப்பகுதி அல்ட்ராசவுண்ட் கருவி உள்ளிட்ட 2 மருத்துவக் காப்புரிமைகளையும் இவர் பெற்றுள்ளார்.

டாக்டர் அருண் பாபுவின் இந்த மகத்தான சாதனை குறித்துப் பாராட்டு தெரிவித்த ஜிப்மர் இயக்குநர் டாக்டர் வீர் சிங் நேகி, இது ஜிப்மர் கல்வி நிறுவனத்தின் உயரிய நற்பெயருக்குக் கிடைத்த மற்றொரு மகுடம் என்று புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் ஜிப்மர் நிர்வாகம், மருத்துவர்கள், மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன