மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்களை அறிவித்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னை, 09/09/2026: தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவை இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர்கள் களம் இறங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மதுராந்தகம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் வழக்கறிஞர் திரு. ஐ.பரந்தாமன், பி.ஏ., பி.எல்., போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தாராபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் வழக்கறிஞர் திருமதி. எஸ். சுகன்யா, எம்.ஏ., பி.எல்., திமுக வேட்பாளராகப் போட்டியிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

