தமிழ்நாடு

கோவில்களுக்குள் செல்போன் தடை விவகாரம்: பக்தர்கள் கடும் எதிர்ப்பு எதிரொலியாக 6 நாட்களில் திட்டம் ரத்து!

சென்னை, செப். 08:

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய திருக்கோவில்களுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை மற்றும் செல்போன் பாதுகாப்பு மையங்களுக்கான கட்டண திட்டம் அமலுக்கு வந்த வெறும் 6 நாட்களிலேயே ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள முக்கிய 52 திருக்கோவில்களில் பாதுகாப்பு மற்றும் ஆன்மீக அமைதியை கருத்தில் கொண்டு, கோவில்களுக்குள் செல்போன் கொண்டு செல்ல கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதற்காக கோவில் நுழைவு வாயில்களில் பிரத்யேக ‘கைபேசி பாதுகாப்பு மையங்கள்’ அமைக்கப்பட்டு, செல்போன் ஒன்றுக்கு ரூ.5 கட்டணம் வசூலித்து பாதுகாப்பாக வைக்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டது.

எனினும், இந்த புதிய நடைமுறையால் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் உள்ளிட்ட பல்வேறு புகழ்பெற்ற தலங்களில் செல்போன்களை ஒப்படைக்கவும், தரிசனம் முடிந்து மீண்டும் பெறவும் பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவானது. இதனால் முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இதையடுத்து பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, பெரும்பாலான கோவில்களுக்குள் செல்போன்களை எடுத்துச் செல்ல மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், கோவிலுக்குள் செல்லும்போது செல்போன்களை கட்டாயம் ‘சுவிட்ச் ஆப்’ (Switch Off) செய்து வைத்திருக்க வேண்டும் என்று பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன