புதுச்சேரியில் 38% குடிநீரில் பாக்டீரியா தொற்று: சிஏஜி அறிக்கையைச் சுட்டிக்காட்டி ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் எச்சரிக்கை!
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் சுமார் 38 சதவீத மக்கள் பயன்படுத்தும் குடிநீரில் அபாயகரமான பாக்டீரியா கிருமித் தொற்று கலந்திருப்பது இந்திய கணக்குத் தணிக்கைத் துறை (சிஏஜி) அறிக்கையில் அம்பலமாகியுள்ளதாக ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.
மாநிலத்தில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து வெளியாகியுள்ள இந்த தணிக்கை விவரங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிலத்தடி நீர் ஆதாரங்கள் மற்றும் விநியோகக் குழாய்களில் ஏற்பட்டுள்ள சேதங்கள் காரணமாக குடிநீரில் ஆபத்தான பாக்டீரியாக்கள் கலப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது பொதுமக்களின் அன்றாட சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
எனவே, பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில் புதுச்சேரி அரசு உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரின் பல்வேறு முக்கியப் பகுதிகளில் நவீன நீர் சுத்திகரிப்பு நிலையங்களை விரைந்து அமைத்து, மக்களுக்குத் தூய்மையான குடிநீர் தடையின்றி கிடைப்பதை முதலமைச்சர் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
