புதுச்சேரி ஆளுநர் மாளிகையை அலங்கரிக்கும் கேரள பாரம்பரிய சுவர் ஓவியங்கள்: ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் அர்ப்பணிப்பு!
புதுச்சேரி: புதுச்சேரி ஆளுநர் மாளிகையான லோக் நிவாஸ் வளாகத்தை அழகுபடுத்தும் வகையில் வரையப்பட்டுள்ள கேரள பாரம்பரிய சுவர் ஓவியங்களை அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கே. கைலாஷ்நாதன் மற்றும் முதலமைச்சர் என். ரங்கசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், உள்துறை அமைச்சர் ஏ. நமச்சிவாயம், ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் கலை பண்பாட்டுத்துறை அமைச்சர் ஏ.கே. ராஜவேலு, மாஹே சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார் உள்ளிட்டோர் முக்கியப் பிரமுகர்களாகப் பங்கேற்றனர்.
விழாவின் போது, கேரளாவின் தொன்மை வாய்ந்த கலை நயத்துடன் கூடிய சுவர் ஓவியங்களை உருவாக்கிய ஓவியக் குழுவின் தலைவர் சுலோச்சனா, அப்படைப்புகளை முறைப்படி ஆளுநர் மாளிகைக்கு அர்ப்பணித்தார். ஆளுநர் மாளிகையின் பாரம்பரிய சிறப்பை மேலும் மெருகூட்டும் வகையில் அமைந்துள்ள இந்த ஓவியங்களை ஆளுநர் மற்றும் முதல்வர் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஓவியக் கலைஞர்களுக்குத் தங்கள் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.