புதுச்சேரி: மூலக்குளம் பகுதியில் கத்தியுடன் ‘ரவுடி பந்தா’ காட்டிய 2 பேர் அதிரடி கைது!
புதுச்சேரி: மூலக்குளம் ஜெ.ஜெ. நகர் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் நோக்கில் கத்தியுடன் சுற்றித்திரிந்த இரண்டு நபர்களை போலீசார் விரட்டிப் பிடித்து கைது செய்தனர்.
மூலக்குளம் ஜெ.ஜெ. நகர் அருகே காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றுகொண்டிருந்த இருவர் போலீசாரைக் கண்டதும் தப்பியோட முயன்றனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், இருவரையும் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவர்களிடம் தீவிர சோதனை மேற்கொண்டதில், மறைத்து வைக்கப்பட்டிருந்த கத்தி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில், பிடிபட்டவர்களில் அரவிந்த் என்பவர் மீது ஏற்கனவே ஆயுதம் வைத்திருந்தது, அடிதடி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. மேலும், தங்களை பெரிய ரவுடி போல் காட்டிக்கொள்ளும் பந்தாவுக்காகவே இவர்கள் பொது இடத்தில் கத்தியுடன் சுற்றித்திரிந்ததும் விசாரணையில் அம்பலமானது. இதனைத் தொடர்ந்து இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.

