அரசியல்

மல்லிகார்ஜுன கார்கே விவகாரம்: பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுச்சேரி காங்கிரசார் போலீசில் புகார்!

புதுச்சேரி: உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்ற கூட்ட அரங்கை ‘சுத்திகரிப்பு’ செய்த பாஜகவினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி, புதுச்சேரி பெரியகடை காவல் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் முறைப்படி புகார் மனு அளித்துள்ளனர்.

உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானி பகுதியில் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்துகொண்ட பொதுக்கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அவர் அந்த இடத்தை விட்டு வெளியேறிய பின்னர், சாதிய பாகுபாட்டை வெளிப்படுத்தும் நோக்கில் பாஜகவினர் அங்கு கங்கை நீர் தெளித்து “சுத்திகரிப்பு சடங்கு” செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் செயல் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், சாதிய தீண்டாமையை வெளிப்படுத்தும் வகையில் செயல்பட்ட பாஜகவினர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி புதுச்சேரி ராஜ்பவன் காங்கிரஸ் கமிட்டி சார்பில் பெரியகடை காவல் நிலைய ஆய்வாளர் ஜெய்சங்கரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது ராஜ்பவன் வட்டார காங்கிரஸ் தலைவர் ஜெரால்டு, மாநில பொதுச்செயலாளர் மருதுபாண்டியன், வழக்கறிஞர் பிரதீஷ் இருதயராஜ் மற்றும் கத்திட்ரல் வார்டு காங்கிரஸ் தலைவர் அலன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன