காங்கிரஸ் ஒன்றும் தவெக-வுக்கு அடிமை இல்லை: முன்னாள் முதல்வர் நாராயணசாமி காட்டம்!

புதுச்சேரி: புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆளுநர் ஆற்றிய உரை எந்தவித உருப்படியான திட்டங்களும் இல்லாத வெற்று அறிக்கையாக உள்ளது என்று முன்னாள் முதல்வர் வே.நாராயணசாமி விமர்சித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், விமான நிலைய விரிவாக்கம், ஆசிய வங்கி நிதி, உலக வங்கி நிதி என அறிவிக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்ற பல ஆண்டுகள் ஆகும் எனவும், தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள ரூ.14,300 கோடி பட்ஜெட்டில் 80 சதவீதம் நிதி சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்கே சென்றுவிடுவதால் வளர்ச்சித் திட்டங்களுக்குப் போதிய நிதியில்லை என்றும் குற்றம்சாட்டினார். மேலும், நிர்வாகத் திறமையின்மையால் ரூ.1,041.79 கோடி நிதியைச் செலவு செய்யாமல் ஒன்றிய அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளனர் என்று சிஏஜி அறிக்கையைச் சுட்டிக்காட்டி சாடினார்.
தொடர்ந்து பேசிய அவர், மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்றும், அது தமிழக டெல்டா விவசாயிகளைப் பெருமளவில் பாதிக்கும் என்றும் தெரிவித்தார். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதற்கு முதல்வர் ரங்கசாமியும் அமைச்சர்களும் நேரடியாக பிரதமரைச் சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
அரசியல் நிலவரம் குறித்துப் பேசிய நாராயணசாமி, 2029 நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்பதை ‘இந்தியா’ கூட்டணியினர் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்றும், இதனை தவெக தலைவர் விஜய்யும் ஏற்றுக்கொள்வார் என்றும் தெரிவித்தார். அதேவேளையில், கூட்டணியில் இருந்தாலும் காங்கிரஸ் கட்சி ஒன்றும் தவெக-வுக்கு அடிமை கிடையாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

