புதுச்சேரி

மேடையில் இருக்கை ஒதுக்காததால் அரசு விழாவிலிருந்து எம்.எல்.ஏ. வெளிநடப்பு: புதுச்சேரியில் ஆதரவாளர்கள் சாலை மறியல்!

புதுச்சேரி:

புதுச்சேரியில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்ற மீன்வளத்துறை அரசு விழாவில், ராஜ்பவன் தொகுதி எம்.எல்.ஏ. விக்னேஷ் கண்ணனுக்கு மேடையில் இருக்கை ஒதுக்கப்படாததால் அவர் விழாவைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தார். இதனைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் சாலையில் இறங்கி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி மீன்வளத்துறை சார்பில் அரசு நலத்திட்ட விழா நடைபெற்றது. இவ்விழாவில் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றனர். ஆனால், தொகுதி சட்டமன்ற உறுப்பினரான விக்னேஷ் கண்ணனுக்கு மேடையில் இருக்கை ஒதுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. தனது சுயமரியாதையையும், தன்னைத் தேர்ந்தெடுத்த தொகுதி மக்களின் கண்ணியத்தையும் காக்கும் வகையில், அரசு விழாவிலிருந்து உடனடியாக வெளிநடப்பு செய்வதாக எம்.எல்.ஏ. விக்னேஷ் கண்ணன் தெரிவித்தார்.

சட்டமன்ற உறுப்பினர் அவமதிக்கப்பட்டதாகக் கூறி, ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் புதுச்சேரி அஜந்தா சிக்னல் அருகே திரண்டு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். போலீசாரின் உறுதியைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன