எதற்கு எடுத்தாலும் ‘Dolo 650’ மாத்திரை: ஆரம்ப சுகாதார நிலையங்களின் அவலம் குறித்து எம்.எல்.ஏ. ரவிக்குமார் ஆதங்கம்!
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சிகிச்சைக்காக வரும் பொதுமக்களுக்கு எந்த உடல்நலக் குறைபாடு இருந்தாலும் ‘டோலோ 650’ மாத்திரையை மட்டுமே கொடுத்து, அரசு உயர் மருத்துவமனைக்குச் செல்லுமாறு திருப்பி அனுப்பும் அவல நிலை நீடிப்பதாக வில்லியனூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தெரிவிக்கையில், புறநகர் மற்றும் கிராமப்புற மக்கள் தங்களின் அவசர மற்றும் அன்றாட மருத்துவத் தேவைகளுக்காகவே அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை பெரிதும் நம்பியுள்ளனர். ஆனால், அங்கு போதுமான அடிப்படை மருத்துவ வசதிகளோ, விரிவான சிகிச்சைகளோ முறையாக வழங்கப்படுவதில்லை. சளி, காய்ச்சல் முதல் பல்வேறு உபாதைகளுக்கு சிகிச்சைக்குச் செல்பவர்களுக்கும் வெறும் டோலோ 650 மாத்திரையை மட்டுமே வழங்கிவிட்டு அரசு பொது மருத்துவமனைக்கு செல்லப் பரிந்துரைக்கின்றனர் என்று தெரிவித்தார்.
இதனால் ஏழை, எளிய மக்கள் பெரும் அலைக்கழிப்புக்கும் அவதிக்கும் உள்ளாவதாகக் குறிப்பிட்ட அவர், அரசு உடனடியாக இதில் தலையிட வேண்டும் என வலியுறுத்தினார். ஆரம்ப சுகாதார நிலையங்களின் உள்கட்டமைப்பை நவீனப்படுத்தி, அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவர்களின் சேவையை உறுதி செய்து சுகாதார நிலையங்களை உடனடியாக மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.