பள்ளி குழந்தைகளுடன் ரக்ஷா பந்தன் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடிய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்!

புதுதில்லி:
இந்தியாவின் 14-வது குடியரசுத் தலைவரான ராம்நாத் கோவிந்த், தனது இல்லத்தில் பல்வேறு பள்ளிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் குழந்தைகளுடன் புனிதமான ரக்ஷா பந்தன் பண்டிகையை மிகவும் உற்சாகமாகவும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடினார்.
சகோதரத்துவத்தையும் பாசப் பிணைப்பையும் பறைசாற்றும் ரக்ஷா பந்தன் திருநாளை முன்னிட்டு, பல்வேறு பள்ளி மாணவர்கள் முன்னாள் குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து அவருக்கு ராக்கி கயிறுகளைக் கட்டி அன்பைப் பகிர்ந்துகொண்டனர். குழந்தைகளுடன் பாசத்தோடு உரையாடிய ராம்நாத் கோவிந்த், அவர்களின் கல்வி மற்றும் எதிர்காலம் சிறக்க தனது ஆசிகளைத் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எனது இல்லத்தில் பல்வேறு பள்ளிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுடன் இணைந்து புனிதமான ரக்ஷா பந்தன் பண்டிகையைக் கொண்டாடியதில் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன். குழந்தைகளின் பாசமும் உற்சாகமும் இந்த விழாவின் மகிழ்ச்சியை மேலும் சிறப்பானதாக மாற்றியது. மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த ரக்ஷா பந்தன் நல்வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.



