தேங்காய்த்திட்டில் ரூ.4.60 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட அங்கன்வாடி மையம்: எம்எல்ஏ கா.அய்யப்பன் திறந்து வைத்தார்!
புதுச்சேரி, ஆக. 22: புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் புதுநகர்-2 அங்கன்வாடி மையம் புதுப்பிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அரியாங்குப்பம் தொகுதிக்குட்பட்ட தேங்காய்த்திட்டு திலகர் நகர் 2-வது குறுக்குத் தெருவில் உள்ள புதுநகர்-2 அங்கன்வாடி மையக் கட்டிடம் கடந்த சில காலமாக சிதிலமடைந்து காணப்பட்டது. இதனையடுத்து, அக்குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ரூபாய் 4.60 லட்சம் மதிப்பீட்டில் இம்மையத்தை முழுமையாகப் புனரமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று முடிவடைந்தன.
இப்புதுப்பிக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் அரியாங்குப்பம் சட்டமன்ற உறுப்பினர் திரு. கா.அய்யப்பன் கலந்து கொண்டு, ரிப்பன் வெட்டி புதிய மையத்தை முறைப்படி திறந்து வைத்து பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் அனைத்து அங்கன்வாடி மைய ஆசிரியைகள், உதவியாளர்கள், என்.ஆர். காங்கிரஸ் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிப் பிரமுகர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

