முதியோர் பராமரிப்பு, சொத்து மாற்றம் தொடர்பான முக்கிய அறிவுரை

தங்களது சொந்த வருமானம் அல்லது தங்களுக்குச் சொந்தமான சொத்தின் மூலம் தங்களைப் பராமரித்துக் கொள்ள இயலாத மூத்த குடிமக்கள், பெற்றோர்கள் உட்பட, தங்களது பதினெட்டு வயது முழுமை அடைந்த பிள்ளைகளிடமிருந்து பராமரிப்பு கோரி பராமரிப்பு தீர்ப்பாயத்தை அணுகுமாறு புதுச்சேரி வருவாய்த் துறை அறிவுறுத்தியுள்ளது. பிள்ளைகள் இல்லாத மூத்த குடிமக்கள், தங்களது சொத்தைத் தமது வசம் வைத்திருக்கும் அல்லது தங்களுக்குப் பிறகு அந்தச் சொத்தை வாரிசாகப் பெறக்கூடிய சட்டப்பூர்வ வாரிசு உறவினரிடமிருந்து பராமரிப்பு கோர பராமரிப்பு தீர்ப்பாயத்தை அணுகலாம்.
ஒரு மூத்த குடிமகன்/மூத்த குடிமகள் தனது சொத்தை தானமாகவோ அல்லது வேறு வகையிலோ மாற்றம் செய்யும் போது, சொத்தைப் பெறுபவர் தங்களைப் பராமரிக்க வேண்டும் என விரும்பினால், பதிவு செய்யப்பட்ட ஆவணத்தில் சொத்தைப் பெறுபவர் மூத்த குடிமக்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் அடிப்படை உடல் தேவைகளை வழங்க வேண்டும் என்ற நிபந்தனையைத் தெளிவாகக் குறிப்பிடுமாறு அறிவுறுத்தப்படுகிறது்.
இத்தகைய குறிப்பிட்ட நிபந்தனை பதிவு செய்யப்பட்ட ஆவணத்தில் இருப்பது, பின்னர் சொத்தைப் பெற்றவர் தேவையான பராமரிப்பு மற்றும் அடிப்படைத் தேவைகளை வழங்க மறுக்கும் அல்லது தவறும் பட்சத்தில், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலன் சட்டம், 2007-ன் பிரிவு 23-ன் கீழ் பராமரிப்பு தீர்ப்பாயத்தை அணுகி நிவாரணம் கோருவதற்கு உதவியாக இருக்கும் என புதுச்சேரி உட்கோட்ட நடுவர் (வடக்கு) தயானந்த் டெண்டோல்கர் தெரிவித்துள்ளார்.
