புதுச்சேரி

ஹர் கர் திரங்கா இயக்கத்தில் பங்கேற்க துணைநிலை ஆளுநர் அழைப்பு

இந்தியாவின் 80-வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை வரலாற்றுச் சிறப்புமிக்கதாக மாற்ற, புதுச்சேரி மக்கள் அனைவரும் ‘ஹர் கர் திரங்கா’ இயக்கத்தில் பங்கேற்க வேண்டும் என துணைநிலை ஆளுநர் கே. கைலாஷ்நாதன் அழைப்பு விடுத்துள்ளார்.

ஆகஸ்ட் 9 முதல் 17 வரை நடைபெறும் இந்த இயக்கத்தின் போது, தேசபக்தி உணர்வுடன் தேசியக் கொடியின் கீழ் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடியை பெருமையுடன் ஏற்றுவதன் மூலம் நாட்டின் ஒற்றுமை மற்றும் தேசிய உணர்வை வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், பொதுமக்கள் தேசியக் கொடியுடன் செல்ஃபி எடுத்து harghartiranga.com இணையதளத்தில் பதிவேற்றம் செய்து இந்த இயக்கத்தில் இணைந்துகொள்ளலாம் என துணைநிலை ஆளுநர் தெரிவித்துள்ளார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி யூனியன் பிரதேச மக்கள் அனைவரும் தங்களது வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தேசியக் கொடியை பெருமையுடன் ஏற்ற வேண்டும் என துணைநிலை ஆளுநர் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், புதுச்சேரி லோக் நிவாஸ் பழைய மற்றும் புதிய கட்டடங்களில் தேசிய மூவர்ணக் கொடி உயரப் பறப்பது, நாட்டின் ஒற்றுமையையும் வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் மக்களின் தளராத உறுதியையும் எடுத்துக்காட்டுவதாக தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் இந்த இயக்கத்தில் பங்கேற்று தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். ஒவ்வொரு இல்லமும் தேசியப் பெருமிதத்தையும், இந்தியாவின் வளர்ச்சிக்கான பகிர்ந்த பொறுப்புணர்வையும் பிரதிபலிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன