பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்: தொகுதி மறுவரையறை

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை பரிசீலித்து, அதனை நடைமுறைப்படுத்த தேவையான அரசமைப்புச் சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 12-ம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலை பிரதமருக்கு அனுப்பியுள்ள முதல்வர் விஜய், மக்களவையின் உறுப்பினர் எண்ணிக்கையை தற்போதைய 543 ஆக நிரந்தரமாக வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மாநிலங்களுக்கு தற்போதுள்ள மக்களவைத் தொகுதி ஒதுக்கீட்டிலும் மாற்றம் செய்யக்கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்கள்தொகை கட்டுப்பாட்டு திட்டங்களை திறம்பட செயல்படுத்திய தமிழகத்தைப் போன்ற மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம், எதிர்கால தொகுதி மறுவரையறையால் குறையக் கூடாது என்பதே சட்டப்பேரவைத் தீர்மானத்தின் முக்கிய நோக்கமாகும்.
மேலும், தற்போதைய 543 மக்களவைத் தொகுதிகளின் அடிப்படையிலேயே வரும் மக்களவைத் தேர்தலிலும், அதைத் தொடர்ந்து நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்றும் முதல்வர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.


