விண்ணேற்பு அன்னை ஆலயம் 175வது ஆண்டு பெருவிழா தொடக்கம்
புதுச்சேரி நெல்லித்தோப்பில் உள்ள விண்ணேற்பு அன்னை ஆலயத்தின் 175வது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி ஆலயக் கொடிமரத்தில் பெருவிழாக் கொடி ஏற்றப்பட்டு, சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.
சேலம் மறைமாவட்ட ஆயர் அருள்செல்வம் ராயப்பன் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் ஏராளமான இறைமக்கள் பங்கேற்றனர். விழா நாட்களில் தினமும் காலை, மாலை நேரங்களில் திருப்பலி, செபமாலை, தேர்பவனி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
வரும் 15ஆம் தேதி மாலை 4.30 மணிக்குப் பங்குத்தந்தை தலைமையில் சிறப்புத் திருப்பலி நடைபெறுகிறது. தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு மாதா தேர்பவனி நடைபெற உள்ளது.
விழாவின் முக்கிய நிகழ்வாக, வரும் 17ஆம் தேதி புதுச்சேரி-கடலூர் உயர்மறை மாவட்டப் பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் திருப்பலி மற்றும் பெருவிழா ஆராதனை நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு விழாவில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் பங்கேற்று வழிபட்டு வருகின்றனர்.

