ஒருவழிப் பாதையில் அத்துமீறி பஸ் இயக்கிய விவகாரம்: தவறை ஒப்புக்கொண்டு டிரைவர் மன்னிப்பு கோரும் வீடியோ வைரல்!
புதுச்சேரி, செப். 26:
புதுச்சேரி – கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒருவழிப் பாதையில் விதியை மீறி தனியார் பேருந்தை அதிவேகமாக இயக்கிய ஓட்டுநர், காவல் நிலையத்தில் ஆஜராகி மன்னிப்பு கோரியுள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
புதுச்சேரியிலிருந்து கடலூர் நோக்கி கடந்த மாதம் நள்ளிரவு நேரத்தில் சென்ற தனியார் பேருந்து ஒன்று, கன்னியக்கோவில் சந்திப்பு பகுதியில் போக்குவரத்து விதிகளை அப்பட்டமாக மீறி ஒருவழிப் பாதையின் வலதுபுறத்தில் அசுர வேகத்தில் ஆபத்தான முறையில் சீறிப்பாய்ந்தது. எதிரே வாகனங்கள் வந்து கொண்டிருந்த சூழலில் நிகழ்ந்த இந்த விபரீத செயல், பேருந்து பயணிகள் மற்றும் பிற வாகன ஓட்டிகளிடையே பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரலானதைத் தொடர்ந்து, கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், விதிகளை மீறி பேருந்தை ஆபத்தான முறையில் இயக்கியவர் தஞ்சாவூர் மாவட்டம் கரந்தை பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் (51) என்பது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து காவல் நிலையத்தில் ஆஜரான ஓட்டுநர் ராமலிங்கம் நேரில் விளக்கம் அளித்தார். பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சேர்க்கும் அவசரத்தில் ஒருவழிப் பாதையில் சென்றதாகத் தெரிவித்தார். மேலும், தான் செய்த செயலுக்கு வருத்தம் தெரிவித்த அவர், இனி இதுபோன்ற தவறுகளை ஒருபோதும் செய்ய மாட்டேன் என்று மன்னிப்புக் கடிதம் அளித்ததுடன் வீடியோவிலும் மன்னிப்பு கோரினார். இந்த வீடியோ பதிவும் தற்போது இணையத்தில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

