தமிழ்நாடு

விசிக மறியலில் பரபரப்பு: இளைஞர் கைது

தஞ்சாவூர் மாநகராட்சிப் பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர்களை அதிகாரிகள் அகற்றியதைத் தொடர்ந்து, விசிகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் இளைஞர் ஒருவர் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

உளுந்தூர்பேட்டையில் நடைபெற உள்ள விசிக மாநாட்டை முன்னிட்டு, தஞ்சாவூர் காந்திஜி சாலையில் ரயில் நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த கட்சிப் பேனர் அகற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து மாநகராட்சி அலுவலகம் முன்பு விசிகவினர் சாலை மறியலில் ஈடுபட்டு, பேனரை மீண்டும் வைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

அப்போது விலார் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் (26) இருசக்கர வாகனத்தில் அவ்வழியாகச் செல்ல முயன்றார். அவசரமாகச் செல்ல வேண்டும் என அவர் கூறிய நிலையில், போராட்டக்காரர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தஞ்சாவூர் மேற்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் அப்துல் ரஹீம், ஆகாஷை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதற்கு பதிலளிக்கும் விதமாக ஆகாஷ், காவல் அதிகாரியை கன்னத்தில் அறைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து ஆகாஷை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும், போலீசாரை தரக்குறைவாகப் பேசி வாக்குவாதம் தீவிரமடையாமல் தடுக்கவே குறைந்தபட்ச பலம் பயன்படுத்தப்பட்டதாக தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன