டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் ஆன்லைன் முன்பதிவு: புதிய நடைமுறை அமலுக்கு
தமிழ்நாட்டில் இன்று முதல், டாஸ்மாக் மூலம் மதுபான விற்பனையை ஆன்லைன் வழியாகவும் செய்யும் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது. நுகர்வோர் Tasmace2e.in என்ற தளத்தில் முன்பதிவு செய்து, தேர்ந்தெடுத்த நேரத்தில் கடைகளிலிருந்து பொருட்களைப் பெற முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கூட்டம் கூடும் நிலை, நீண்ட வரிசைகள், சண்டைகள் போன்றவற்றைக் குறைக்கும் நோக்கில் இந்த ஆன்லைன் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. ஆன்லைனில் முன்பதிவு செய்தால் குறிப்பிட்ட வரம்பில் மட்டுமே வாங்க முடியும்; இதன் மூலம் அதிகளவில் வாங்கிக் கருப்புச் சந்தைக்குச் செல்லும் நிலையைக் கட்டுப்படுத்த முடியும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கடைகளில் விற்பனைக்கு வரும் பொருட்களின் விவரங்கள் ஸ்கேனர் மற்றும் பில்லிங் கருவி மூலம் கண்காணிக்கப்பட உள்ளன.
Tasmace2e.in தளத்தில் நுகர்வோர் அருகிலுள்ள டாஸ்மாக் கடையையும், அதில் கிடைக்கும் பிராண்டுகள் மற்றும் விலை விவரங்களையும் பார்த்து, தேவையானவற்றைத் தேர்வு செய்து மொபைல் எண் மூலம் ஓ.டி.பி. உறுதிப்படுத்தி ஆன்லைனில் பணம் செலுத்தலாம். வயது 21க்கு மேல் உள்ளதை உறுதி செய்யும் நடைமுறையும் இதில் அடங்கியுள்ளது.
பணம் செலுத்திய பின் கியூஆர் குறியீட்டுடன் ரசீது கிடைக்கும்; அதே நாளில் தேர்வு செய்த கடைக்குச் சென்று அந்தக் குறியீட்டைக் காட்டி பொருட்களைப் பெறலாம். அதே நாளில் பெறப்படாத ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டு, ரூ.10 கழிவுத் தொகை பிடித்து மீதித் தொகை திரும்ப வரவு வைக்கப்படும்.