புதுச்சேரி

புதுச்சேரி கடற்கரையில் தவறவிட்ட ₹70,000 மதிப்புள்ள கைப்பையை 2 மணி நேரத்தில் மீட்டுக் கொடுத்த போலீஸ்: கேரள பெண் நெகிழ்ச்சி!

புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரை சாலையில் சுற்றுலாப் பயணி ஒருவர் தவறவிட்ட பணம் மற்றும் விலைமதிப்பற்ற பொருட்கள் அடங்கிய கைப்பையை, ஊர்க்காவல்படை வீரர் துரிதமாக செயல்பட்டு இரண்டு மணி நேரத்தில் பத்திரமாக மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியையும் பாராட்டையும் பெற்றுள்ளது.

புதுச்சேரி கடலோர காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் ஊர்க்காவல்படை வீரர் த.வரதராஜ், ராக் பீச் (Rock Beach) பகுதியில் வழக்கமான பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு கேட்பாரற்றுக் கிடந்த கைப்பையைக் கண்டெடுத்த அவர், அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தபோது அது யாரோ தவறவிட்டது என்பது தெரியவந்தது. உடனடியாக இதுகுறித்து கடலோர காவல் நிலைய ஆய்வாளர் தியாகராஜனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆய்வாளர் தியாகராஜனின் வழிகாட்டுதலின்படி, தீவிர விசாரணையில் இறங்கிய போலீஸார் வெறும் இரண்டு மணி நேரத்திற்குள் அந்த கைப்பையின் உரிமையாளரைக் கண்டறிந்தனர். அக்கைப்பை கேரள மாநிலத்தைச் சேர்ந்த ராஷ்மி என்ற பெண் சுற்றுலாப் பயணியுடையது என்பது உறுதியானது.

இதையடுத்து, கைப்பையில் இருந்த ₹10,000 ரொக்கப் பணம், ₹60,000 மதிப்பிலான ஸ்மார்ட்போன், ஏடிஎம் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மற்றும் பயண டிக்கெட்டுகள் அனைத்தும் உரிய முறையில் சரிபார்க்கப்பட்டு, ராஷ்மியிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டன. உடமைகளை மீட்டுக் கொடுத்த காவல்துறைக்கு அப்பெண் நன்றி தெரிவித்த நிலையில், நேர்மையாக செயல்பட்ட ஊர்க்காவல்படை வீரருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன