தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: மநீம பொதுச்செயலாளரை நேரில் சந்தித்த திமுக தலைவர்கள்!

புதுச்சேரி: புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக தலைமைக் கழகப் பொறுப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகன் மற்றும் புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ஆர். சிவா ஆகியோர் மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர் ஜி.ஆர். சந்திரமோகனை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசினர்.
மரியாதை நிமித்தமாக நடைபெற்ற இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், வரவிருக்கும் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் வியூகங்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஒருங்கிணைப்புப் பணிகள் குறித்து விரிவாகக் கருத்துகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. தேர்தலை எதிர்கொள்வது மற்றும் கூட்டணியின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாகவும் இரு தரப்பினரும் ஆலோசித்தனர்.
இந்தச் சந்திப்பின் போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலச் செயலாளர் எஸ். சக்திவேல், சட்ட மாணவர் அணிச் செயலாளர் ஆர்.சி. ஜெயச்சந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் இச்சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

