புதுச்சேரி

புதுச்சேரியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்: மாவட்ட தேர்தல் அதிகாரி சுற்றறிக்கை

புதுச்சேரி, அக். 08: புதுச்சேரி மாவட்டத்தில் விடுபட்ட வாக்காளர்கள் மற்றும் புதிய இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலகம் அறிவித்துள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் தொடர் திருத்த நடைமுறையின் கீழ் விடுபட்ட வாக்காளர்கள் மற்றும் புதிய இளம் வாக்காளர்களை சேர்ப்பதற்கான சிறப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி புதுச்சேரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சீரமைக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இது தொடர்பாக புதுச்சேரி துணை மாவட்ட தேர்தல் அதிகாரி எஸ். கண்ணபிரான் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தட்டாஞ்சாவடி தொகுதி நீங்கலாக, புதுச்சேரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் விடுபட்ட வாக்காளர்கள் மற்றும் இளம் வாக்காளர்கள் தங்களது பெயர்களை சேர்க்கும் வகையில் வெள்ளிக்கிழமை (09.10.2026) அன்று சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

எனவே வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்வி நிறுவனங்கள், உள்ளாட்சி கட்டடங்கள் அன்றைய தினம் முழுமையாக திறந்து வைக்கப்பட வேண்டும். வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLOs) இப்பணியை தடையின்றி மேற்கொள்ள தேவையான மேஜை, நாற்காலி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை சம்பந்தப்பட்ட துறை நிர்வாகங்கள் செய்து தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சுற்றறிக்கை பள்ளிக் கல்வி இயக்குநர், உயர்கல்வித் துறை இயக்குநர் மற்றும் உள்ளாட்சித் துறை இயக்குநருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன