புதுச்சேரி

காசநோய் இல்லா இந்தியா: இளைஞர்களை ஒருங்கிணைக்கும் ‘ஜோஷ்’ திட்டம் தொடக்கம் – முதல்வர் ரங்கசாமி, எம்பி செல்வகணபதி பங்கேற்பு!

புதுச்சேரி: காசநோய் இல்லா இந்தியாவை உருவாக்கும் நோக்கில், இளைஞர்களை ஒருங்கிணைக்கும் ‘ஜோஷ்’ (JOSH – Joint Squad for Health) அமைப்புகளின் தொடக்க விழா டெல்லியில் தேசிய அளவில் நடைபெற்றது. காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி முதலமைச்சர் ந.ரங்கசாமி மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.செல்வகணபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மத்திய சுகாதார அமைச்சகம் நாடு முழுவதும் காசநோய் (TB) விழிப்புணர்வை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இளைஞர் நலன் மற்றும் தொடர்புடைய துறைகளுடன் இணைந்து ‘ஜோஷ்’ என்ற புதிய இளைஞர் நல அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. காசநோயை ஒழிப்பதற்கான தீவிர விழிப்புணர்வை அடித்தட்டு மக்களிடமும் கொண்டு சேர்ப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

டெல்லியில் நடைபெற்ற இத்தொடக்க விழாவில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா கலந்துகொண்டு உரையாற்றினார். முதற்கட்டமாக 11 மாநிலங்களில் உள்ள 55 மாவட்டங்களில் இந்த ‘ஜோஷ்’ இளைஞர் குழுக்கள் களமிறக்கப்பட உள்ளன. இந்தக் குழுக்கள் கிராமப்புறப் பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று மக்களிடையே காசநோய் தடுப்பு, அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி தீவிர களப்பணியில் ஈடுபடும் எனத் தெரிவிக்கப்பட்டது.

புதுச்சேரியிலிருந்து முதலமைச்சர் ந.ரங்கசாமி, மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.செல்வகணபதி, சுகாதாரத் துறைச் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் காணொலி வாயிலாக இந்த தேசிய அளவிலான தொடக்க விழாவில் கலந்து கொண்டனர். பொதுமக்களின் சுகாதாரத்தைப் பேணிக் காப்பதில் மத்திய அரசின் இத்தகைய திட்டங்கள் கிராமப்புற அளவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன