புதுச்சேரியில் வந்தே மாதரம் 150-வது ஆண்டு கொண்டாட்டம்: மாணவிகள் திரளாகப் பங்கேற்ற ‘யுவ சக்தி @2047’ நிகழ்ச்சி!
புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள காந்தி சிலை அருகே ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) மகிளா சமன்வயா அமைப்பின் சார்பில், வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு மற்றும் ‘விக்சித் பாரத்திற்கு யுவ சக்தி @2047’ சிறப்பு நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். அவர்கள் அனைவரும் காந்தி சிலை முன்பாக அணிவகுத்து நின்று, ஒரே குரலில் வந்தே மாதரம் பாடலை உணர்ச்சிப் பெருக்குடன் பாடி தங்களது தேசப்பற்றை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்வு கடற்கரை சாலைக்கு வருகை தந்த பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்த எழுச்சிமிகு நிகழ்வில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம், பாஜக மாநிலத் தலைவர் வி.பி.இராமலிங்கம் மற்றும் முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் ஏம்பலம் ஆர்.செல்வம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு மாணவிகளைப் பாராட்டினர்.
