உப்பளத்தில் மழையால் முறிந்து விழுந்த மரம்: களத்தில் இறங்கி உடனடி நடவடிக்கை எடுத்த தற்காலிக சபாநாயகர் அன்பழகன்!

புதுச்சேரி: புதுச்சேரி நகர்ப் பகுதிகளில் பெய்த கனமழை மற்றும் அதிகாலை வீசிய பலத்த காற்று காரணமாக உப்பளம் தொகுதியில் சாலையோரம் முறிந்து விழுந்த மரத்தை, தற்காலிக சபாநாயகரும் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அன்பழகன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு, தீயணைப்புத் துறையினர் உதவியுடன் துரிதமாக அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டார்.
உப்பளம் தொகுதிக்குட்பட்ட ஜெயராம் செட்டியார் தோட்டம் இரண்டாவது தெருவில், அதிகாலை வீசிய பலத்த காற்று மற்றும் மழை காரணமாக சாலையோரம் இருந்த பழமையான மரம் ஒன்று வேரோடு முறிந்து விழுந்தது. இதில் சாலையோர மின்கம்பிகள் அறுந்து விழுந்ததுடன், அருகிலிருந்த ஓரிரண்டு வீடுகளும் லேசான சேதமடைந்தன. இச்சம்பவம் குறித்து அப்பகுதி குடியிருப்புவாசிகள் உடனடியாகத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அன்பழகனுக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவல் கிடைத்த சில நிமிடங்களிலேயே சம்பவ இடத்திற்கு நேரில் விரைந்து சென்ற தற்காலிக சபாநாயகர் அன்பழகன், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் அப்பகுதியில் உடனடியாக மின் இணைப்பைத் துண்டிக்கச் செய்தார். தொடர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டு மீட்புக் குழுவினர் வரவழைக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், மரம் அறுக்கும் மின் இயந்திரங்கள் (Wood Cutters) மூலம் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி, சாலையில் விழுந்து கிடந்த மரக்கிளைகளைத் துண்டு துண்டாக வெட்டி அப்புறப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.
அவசர காலச் சூழலில் காலதாமதமின்றி விரைந்து செயல்பட்டு மரத்தை அப்புறப்படுத்திய தீயணைப்புத் துறையினரை தற்காலிக சபாநாயகர் அன்பழகன் நேரில் பாராட்டினார். மேலும், சாலையில் வெட்டி வைக்கப்பட்டுள்ள மரக்கிளைகளை உள்ளாட்சித் துறை மற்றும் கிரீன் வாரியர்ஸ் தூய்மைப் பணியாளர்கள் உடனடியாக லாரிகள் மூலம் அப்புறப்படுத்தி பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி சாலையைத் தூய்மைப்படுத்த வேண்டும் எனவும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
முன்னதாக, புதுச்சேரியில் பருவமழை தீவிரமடைவதையொட்டி அரசுத் துறைகள் அனைத்தும் ஒருங்கிணைந்து முன்னெச்சரிக்கைப் பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் என். ரங்கசாமி ஏற்கனவே அறிவுறுத்தியிருந்த நிலையில், மக்கள் பிரதிநிதியும் மீட்புத் துறையினரும் இணைந்து உடனடியாக மீட்புப் பணியை முடித்தது அப்பகுதி மக்களிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

