புதுச்சேரியில் இருந்து மாகே, கேரளாவுக்கு விரைவில் விமான சேவை: துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தகவல்!
புதுச்சேரி, செப். 27: புதுச்சேரியிலிருந்து அதன் பிராந்தியமான மாகே மற்றும் கேரளாவின் முக்கிய நகரங்களுக்கு விமான சேவை தொடங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக துணைநிலை ஆளுநர் கே.கைலாஷ்நாதன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி கேரள சமாஜம் சார்பில் ஓணம் குடும்ப சௌஹ்ரித மேளா கடலூர் சாலையில் உள்ள புனித அந்தோனியார் மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார். மேலும், கேரள சமாஜத்தின் ஆண்டு மலரையும் அவர் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் மாகே சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் பரம்பத், கேரள சமாஜ நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றனர்.
விழாவில் ஆளுநர் பேசியதாவது: புதுச்சேரி கேரள சமாஜம் மதம், சாதி, அரசியல் ஆகியவற்றைக் கடந்து ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் செயல்பட்டு வருவது பாராட்டுக்குரியது. மத்திய அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது. இந்த நலத்திட்டத்தை தகுதியுடைய முதியவர்கள் அனைவரும் பெறுவதற்கு சமாஜ நிர்வாகிகள் விழிப்புணர்வும் பதிவும் மேற்கொள்ள வேண்டும்.
மேலும், புதுச்சேரியை அடுத்த வில்லியனூரில் ரூ. 2,000 கோடி மதிப்பீட்டில் புதிய ரயில் முனையம் அமைக்க ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. உடான் (UDAN) திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் இருந்து மாகே, கண்ணூர், கோழிக்கோடு மற்றும் கொச்சி ஆகிய பகுதிகளுக்கு விமான சேவைகள் தொடங்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி விமான நிலையத்தின் ஓடுபாதை 2,500 மீட்டராக விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இதன் மூலம் பெரிய விமானங்கள் மற்றும் சர்வதேச விமான சேவைகள் தொடங்குவதற்கு வழிவகுக்கும் என்று அவர் தெரிவித்தார்.
