புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் திமுக வேட்பாளர் சேதுசெல்வத்தை ஆதரித்து எம்.எல்.ஏ.க்கள் தீவிர வாக்கு சேகரிப்பு!
புதுச்சேரி, செப். 27:
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் திமுக வேட்பாளர் சேது (எ) சேதுசெல்வத்தை ஆதரித்து, முக்கிய தலைவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
புதுவை மாநில தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி., மாநில அமைப்பாளர் சிவா, விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் மருத்துவர் லட்சுமணன் எம்.எல்.ஏ., காலாப்பட்டு சட்டமன்ற உறுப்பினர் செந்தில் (எ) ரமேஷ், வானூர் சட்டமன்ற உறுப்பினர் கௌதம் திராவிடமணி உள்ளிட்ட தலைவர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து தொகுதிக்குட்பட்ட கங்கையம்மன் கோவில் வீதி, மாரியம்மன் கோவில் வீதி, அய்யனார் கோவில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று ஆதரவு திரட்டினர்.
வாக்கு சேகரிப்பின்போது வாக்காளர்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி பேசிய தலைவர்கள், வாடகை வீடுகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா அல்லது அடுக்குமாடி குடியிருப்பு வசதி பெற்றுத் தரப்படும் என்றும், 50 ஆண்டுகளுக்கும் மேலாக கோவில் மானிய நிலங்களில் குடியிருப்பவர்களின் நீண்ட நாள் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்றும் உறுதியளித்தனர்.
மேலும், இப்பகுதி மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல், தடையற்ற மின்சாரம், விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை வசதி மற்றும் இளைஞர்களுக்கான விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை தேவைகளையும் திமுக வேட்பாளர் நிறைவேற்றுவார் எனக்கூறி, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் கண்ணப்பன், கண்டமங்கலம் சேர்மன் வாசு, பொதுக்குழு உறுப்பினர் தங்கவேலு, இந்திரா நகர் தொகுதி செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் தொகுதி நிர்வாகிகள் ஏழுமலை, அருண்குமார் உள்ளிட்ட திரளான திமுகவினர் கலந்துகொண்டனர்.
